

வெவ்வேறு பணிகளுக்கிடையிலும் அஞ்சுமன் நூலகத்தை சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.. குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அதற்காக ஒதுக்கி வேலை நடக்கிறது. அப்படி இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது கவி கா.மு.ஷரீப் எழுதிய கடிதங்களின் தொகுப்பாக இந்த 44 பக்க சிறுநூல் கிடைத்தது. சென்னை புதுக்கல்லூரியின் பேரா. Murali Arooban நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்று அகப்பட்டதும் உடனடியாக தொலைபேசினேன்.. பேராசிரியருக்கு இன்ப அதிர்ச்சி! பெரு மகிழ்ச்சி!!
இந்த நூலைப் புரட்டிப் படித்த போது, கோட்டக்குப்பத்தில் 1982 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய சீறா விளக்கவுரை நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவரும் அண்ணன் குமரி அபூபக்கரும் கோட்டக்குப்பத்தில் இந்த தொடர் இசையரங்க நிகழ்வை நடத்தினர். இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழுவினர் இந்த ஏற்பாடுகளை செய்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று சென்னை காயிதே மில்லத் சர்வதேச ஊடக பயிற்சி அகாடமியில், “Occluded Muslim Histories of Modern South India Rāga-Based Music” என்ற தலைப்பில் பென்சில்வேனியா பல்கலைக் கழக பேராசிரியர் தேவேஷ் சோனேஜி ஆற்றிய உரை நிகழ்வுக்கு நண்பர் Kombai S Anwarன் அழைப்பில் கலந்து கொண்டேன். அன்று நீண்ட நாள் கழித்து அண்ணன் குமரியாரை சந்தித்தேன்..
கோட்டக்குப்பம் என்று சொன்னவுடன் வரிசையாக டாக்டர் இக்பால் பாஷா, அப்துல் ஸலாம், முத்தலிப், காஜி ஜைனுல் ஆபிதீன் ஆகியோரை விசாரித்து பழைய நினைவுகளில் மூழ்கினார். பின்னர் மேடையில் பேசிய போதும் ஒரு வாரம், பத்துநாள் என்று தாமும் கவி கா.மு. ஷெரீபும் நிகழ்த்திய இசை வேள்வியை சிலாகித்தார். ‘இப்போதெல்லாம் அதையெல்லாம் சிந்திக்கவே ஆட்களில்லை’ என்று சொன்னபோது அவர் குரலில் இருந்த ஏக்கம் என்னை கலங்கச் செய்தது..
மண்ணின் ராகத்தையும் பண்பாட்டு அசைவுகளையும் தொலைத்துவிட்டு தேடக்கூட தோன்றாமல் தேமேயென்று நிற்கிறோம்..