

அஞ்சுமன் நிறுவனர் காஜி அப்துல் ஹமீது ஹபீஸ் பாகவி அவர்களின் தந்தை அப்துல் காதர் இப்ராஹிம், 1898 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளி இறுதி பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இது.. (123 ஆண்டு பழமையான ஆவணம்) இதற்கான தேர்வு நடந்தது கோட்டக்குப்பத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் விழுப்புரத்தில் அமைந்த தேர்வு மையத்தில்..
இப்படித்தான் ஆரம்பப்பள்ளி, நடுநிலை (ESLC), உயர்நிலை என்று பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறும் முறை இருந்தது. கல்வி ஜனரஞ்சகமானது மிகப் பெரிய சமூக, அரசியல் மாற்றங்களினால் விளைந்த்து. அதைத்தான் மீண்டும் பழைய பாணிக்குத் திருப்ப புதிய கல்விக் கொள்கை சிபாரிசு செய்கிறது.. சற்றே வசதி படைத்தவர்கள் இன்று எங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் நன்றாகத்தான் படிக்கிறார்கள் என்பதும் இதே மனோபாவத்தில் தான்..
யோசித்துப் பாருங்கள்.. எந்த வசதியும் இல்லாத காலத்தில் யார் யாரெல்லாம் மாவட்டத் தலைநகருக்கும், மாநில தலைநகருக்கும் போய் தேர்வெழுதி கல்வியின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியும்.. சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. மேற்கண்ட அப்துல் காதர் இப்ராஹிம் மிராசுதாரர் குடும்பத்தின் பிள்ளை என்பதை இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டுகிறேன்..
இந்த பின்புலத்தில் இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அடைக்கப்பட்டு அடிதட்டு மக்களின் பிள்ளைகளில் 37% கல்வி புலத்தை விட்டு ஓரங்கட்டப் பட்டுள்ள செய்தியை சற்றே அக்கறையோடு கவனங் கொள்ள வேண்டுகிறேன்..