
கடந்த ஞாயிறன்று (26.5.19) அஞ்சுமன் நடத்திய ரமலான் மானுட நேயக் கூடல் நம் காலத்தின் தட்பவெட்பத்தைக் காட்டும் அளவுமாணியாக அமைந்தது சிறப்பு. வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்ட மதத் தலைவர்களும், கடவுள் நம்பிக்கையற்றவர்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பொதுவுடமைவாதிகளும் ஒரே குரலில் அன்புச் செய்தியை உரக்க மொழிந்தது கூடுதல் சிறப்பு.
அதே நிலையில் வெறுப்பை இணைந்து வேரறுக்க வேண்டிய கட்டாயக் கடமையை அனைவரும் வலியுறுத்தினர். ‘ஆறு மணிக்கு பூசை இருக்கிறது.. அதற்குள் நான் பேசிவிட்டுச் செல்ல வேண்டும்’ என்று விடைபெற்று சென்ற பாதிரியார் அந்தோணிசாமி அடிகளார், சற்று நேரத்தில் மீண்டும் தொலைபேசியில் அழைத்து, ‘நிகழ்ச்சி தொடர்கிறதா.. நான் வரலாமா’ என்று கேட்டு எட்டு மணியளவில் மீண்டும் வந்தது அஞ்சுமனின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரம். அன்புச் செய்தியை பறைசாற்றிய நடைமுறை அழகியல்.. நிகழ்ச்சியின் வெற்றி அந்த இடத்தில் மனிதமாக மலர்ந்தது.. அந்த சுகந்தத்தில் அன்றைய அரங்கு கமழ்ந்தது.. நாளைய இந்தியாவில் நறுமணம் நிறையட்டும்..