இஸ்லாம் மற்றும் தத்துவத்தின் ஒற்றுமை: முஹம்மது கஸ்ஸாலி மற்றும் டேல் கார்னகியின் பார்வை

உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாம் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டல். மனிதனைப் படைத்த இறைவன்தான் அந்த வழிகாட்டலை மனிதனுக்கு தந்துள்ளான் எனும்போது அது மனிதனின் இயல்புகளோடு முற்றிலும் ஒத்துப்போகக்கூடியதாகத்தான் இருக்கும். அவனுடைய மனதில் காணப்படும் இயல்பான பிரித்தறியும் தன்மைக்கும் இஸ்லாம் வழங்கும் போதனைகளுக்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்காது. ஆனால் மனிதனின் மனம் பாவங்களால் களங்கப்படுத்தப்பட்டிருந்தால், அது பிறழ்வுக்கு ஆளாகியிருந்தால் அதனால் அதன் பிரித்தறியும் தன்மை பாதிப்படைகிறது. பிறழ்வுகளையும் இயல்புகளாக காணத் தொடங்குகிறது.

டேல் கார்னகீ ‘கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். மிகவும் பிரபல்யமான, இன்றளவும் அதிகம் வாசிக்கப்படுகின்ற புத்தகம்தான் அது. அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே முஹம்மது கஸ்ஸாலி ‘உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

டேல் கார்னகீ முன்வைக்கின்ற அறிவுரைகள், கருத்துகள் அப்படியே இஸ்லாம் சொல்கின்ற அறிவுரைகளோடு கருத்துகளோடு ஒத்துப்போவது ஆச்சரியமான ஒன்று அல்ல. ஆரோக்கியமான இயல்பைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவர் அடைந்த அதே முடிவுகளை அடைய முடியும். ஆனாலும் அவை ஆச்சரியமானவையாக பார்க்கப்படுகின்றன, பிறழ்வுகள் இங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதனால்.

தம்முடைய இந்தப் புத்தகம் குறித்து முஹம்மது கஸ்ஸாலி முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

“அறிஞர் டேல் கார்னகி எழுதிய ‘கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி’ என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். வாசித்து முடித்து பிறகு அந்தப் புத்தகத்தை இஸ்லாமிய அடித்தளத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்துவிட்டேன்.

ஏனெனில் திறமையான அந்த எழுத்தாளர் நம்முடைய மார்க்கத்திலிருந்து சிலவற்றை எடுத்தெழுதியுள்ளார் என்பதற்காக அல்ல. மாறாக தத்துவவியளார்கள், மனிதர்களைப் பண்படுத்தக்கூடியவர்களின் கருத்துகள், பொதுமக்கள், ஆளுமைகளின் நிலைமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் ஆராய்ந்த பிறகு அவர் நிறுவியுள்ளவற்றின் சுருக்கமான அம்சங்கள் பல்வேறு கோணங்களில் நம்முடைய குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஒத்திசைந்து செல்கின்றன.

அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இஸ்லாம் குறித்து அறிந்திருக்கவில்லை. அது குறித்து அறிந்திருந்தால் அவர் நிறுவிய உண்மைகளை வலுப்படுத்தும் சான்றுகளை வேறு எந்த மூலத்தைவிடவும் அதிக அளவில் இஸ்லாத்திலிருந்து குறிப்பிட்டிருப்பார்.

அனுபவங்களுக்கும் சோதனைகளுக்கும் பிறகு ஆரோக்கியமான இயல்பு தன்னுடைய அறிவுரைகளை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. அது இந்தப் பதிவின்மூலம் அடைந்த ஞானத்தின் இன்னொரு வடிவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்ணியமான அரபி தூதரான முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வின் நாவிலிருந்து வெளிப்பட்டுவிட்டது.

இதன்மூலம் அனுபவத்தின் குரலும் வஹியின் குரலும் ஒன்றுபடுகின்றன. நாம் கூறுவது எந்த அளவு உண்மையானது அல்லது போலியானது என்பதை வாசகர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

நான் இந்தப் புத்தகத்தில் இஸ்லாத்தை இரண்டு முறையில் முன்வைத்துள்ளேன். ஒன்று அதன் மூல ஆதாரங்களிலிருந்து அப்படியே முன்வைத்துள்ளேன். இரண்டு, பேராசிரியர் டேல் கார்னகி முன்வைத்துள்ள அனுபவங்களிலும் ஆதாரங்களிலும் எழுத்துகளிலும் வெளிப்படும் இஸ்லாத்தின் போதனைகளை முன்வைத்துள்ளேன். அறிவுப்பூர்வமான ஒப்பீடாக அல்லது அடுத்த நிலையில் வரக்கூடியதாக அது இருக்கிறது.

இதுதான் நான் நாடியது. இப்படித்தான் நான் செய்துள்ளேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்த மார்க்கத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஒரு முஸ்லிம் எழுத்தாளர். அது அதன் அடிப்படையான மூலாதாரங்களிலிருந்தே கற்கப்பட வேண்டும். அதன் பக்கம் உலகத்தின் தேவை இங்கிருந்தோ அங்கிருந்தோ கிடைக்கக்கூடிய ஆதாரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதையும் நான் அறிவேன்.”

Shah Umari

No photo description available.

All reactions:

33

Previous Post
Newer Post

Leave A Comment

Cart